உலகம்

மீண்டும் எனக்கு வாக்களியுங்கள்; நான் அமெரிக்காவை வலிமைமிக்க நாடாகவே வைத்திருப்பேன்: ட்ரம்ப்

செய்திப்பிரிவு

எனக்கு மீண்டும் வாக்களியுங்கள். இதன் மூலம் நான் அமெரிக்காவை மீண்டும் வலிமைமிக்க நாடாக வைத்திருக்க முடியும் என்று ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கடந்த 2016 ஆம் ஆண்டைப் போலவே பிரச்சாரத்தைத் தொடங்கினார். குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். 

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் நடந்த கூட்டத்தில் ட்ரம்ப் பேசும்போது, “இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் உங்கள் முன் அதிகாரபூர்வ பிரச்சாரத்திற்காக இன்று நின்றுகொண்டு இருக்கிறேன். நான் அமெரிக்காவை வலிமைமிக்க நாடாக மாற்றினேன்.

எனக்கு மீண்டும் வாக்களியுங்கள். இதன் மூலம் நான் அமெரிக்காவை மீண்டும் வலிமைமிக்க நாடாக வைத்திருக்க முடியும்” என்று ட்ரம்ப் உறுதி அளித்தார். அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் அங்கு கூடியிருந்தனர்.

மேலும், ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்கான ஆதரவு தளத்தை உயர்த்துவதற்காக சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுமதித்து நாட்டை வெள்ளத்தில் மூழ்கடிக்க விரும்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் ட்ரம்ப்பின் ஆட்சியில் அமெரிக்காவில் வேலையின்மை குறைந்துள்ளதாகவும் அண்டை நாடுகள் மற்றும் சீனாவுடன்  வணிகரீதியான உறவை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதையும்  அவர் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சியையும், அமெரிக்க ஊடகங்களையும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

SCROLL FOR NEXT