உலகம்

ஏமன் கிளர்ச்சியாளர்கள் சவுதி விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்: ஒருவர் பலி; 21 பேர் காயம்

செய்திப்பிரிவு

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார். 21 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சவுதி  ஊடகங்கள் தரப்பில், ''ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா விமான நிலையம் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார். 21 பேர் காயமடைந்தனர். 18 வாகனங்கள் சேதமடைந்தன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை.

சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான  நிலையத்தில் கடந்த வாரம் புதன்கிழமை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சவுதி அரசு, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் தாக்குதல்களை நடத்தியது. இந்நிலையில் தொடர்ந்து அபா விமான நிலையத்தை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்கியுள்ளனர்.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

SCROLL FOR NEXT