கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல், இந்து அடிப்படைவாத குழுக்களின் வன்முறை செயல்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக பசுக்களை கொண்டு சென்றார்கள், பசு இறைச்சியை வைத்திருந்தார்கள் என்ற வதந்திகளால் முஸ்லிம்கள் மீது நாட்டில் பெரும்பாலான இடங்களில் பசுக் குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் "சர்வதேச மதச்சுதந்திரம்" குறித்த 2018-ம் ஆண்டுக்கான அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதில் இந்தியாவில் 2018-ம் ஆண்டு ஜூலை மாத கணக்கின்படி 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் 79.8 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 14.2 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 2.3சதவீதமும், சீக்கியர்கள் 1.7 சதவீதமும் வாழ்கிறார்கள். பவுத்தம், ஜெயினர்கள், பார்சியர்கள், யூதர்கள், பாஹா ஆகிய மதத்சதைச் சேர்ந்தவர்கள் ஒரு சதவீதம் பேர் இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை என்பது உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்கிறார்கள் என்பதை குறிப்பிடும் ரிப்போர்ட் கார்ட் என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர இந்துத்துவா குழுக்கள் கும்பலாகச் சேர்ந்து அவர்கள் மீது பல்வேறு இடங்களில் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முஸ்லிம்கள் பசு இறைச்சியை வைத்திருக்கிறார்கள், பசுக்களை விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள் என்ற வதந்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகமாக நடந்துள்ளன.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க அரசு தவறிவிட்டது என்று அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக அரசில் இருக்கும் மூத்த அமைச்சர்கள், தலைர்கள் பலரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு கண்டனத்துக்குரிய, கொதிப்படையும் கருத்துக்களை தொடர்ந்து கூறியுள்ளனர்.
பல அரசு சாரா தொண்டு நிறுவனங்களை தாக்கியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயலும்போது, அவர்களைக் கைது செய்யவிடாமல் அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் பாதுகாத்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் கும்பல் வன்முறை காரணமாக 8 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், நவம்பர் மாதம் வரை 18 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு போலீஸ் அதிகாரிகள், கும்பல் வன்முறையால் காயமடைந்த முஸ்லி்ம் வியாபாரி ஒருவரை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்லாமல் அவரின் சாவுக்கு காரணமாகியுள்ளதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர், விளிம்புநிலை சமூகத்தினர் நடத்தும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பலமுறை கும்பல் வன்முறை மூலம் தாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களை தடுக்க அரசு தவறவிட்டது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள், அரசியல் கட்சிகளைச்ச சேர்ந்தவர்கள் பலர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, முஸ்லிம் சமூகத்தினர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க இன்னும் இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பெயர்கள் கொண்ட மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக அலகாபாத் நகரம் பரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. இந்த செயல்பாடுகள் இந்திய வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தினரின் பங்களிப்புகளை நீக்குவும், மதங்களுக்கு இடையே பதற்றத்தையும் அதிகரிக்கவும் செய்யும்.
மதரீதியான கொலைகள், தாக்குதல்கள், கலவரங்கள், பாகுபாடுகள், சூறையாடுதல், தனிநபர்ககள் தங்களின் விருப்பமான மதத்தையும், நம்பிக்கையையும் பின்பற்ற கட்டுப்பாடு விதித்தல் போன்றவை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன.
ஆண்டு முழுவதும் மக்களின் மதரீதியான சுதந்திரத்தை மதிக்கவும், மக்களிடையே சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், சிவில் குழுக்கள், மதச்சதந்திர ஆர்வலர்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஆகியோர் மூலம் நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.