ஈரான்தான் எண்ணெய்க் கப்பலைத் தாக்கியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப்பெரிய மையத்தில் 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை ஈரான் பின்னணியில் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஹார்மஸ் கடற்கரையில் கல்ஃப் ஆஃப் ஓமன் பகுதியில் எண்ணெய்க் கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடந்தப்பட்டது. கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே இந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் திட்டவட்டமாக கூறி வந்தார்.
இந்நிலையில் இதற்கான ஆதாரத்தை அமெரிக்க கடற்படை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், ஈரானின் கடற்படையைச் சேர்ந்த ஊழியர்கள் துளையிடும் காட்சி பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புகைப்படங்களுடன் வெளியிட்டது.
ரகசிய அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபடுவதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்துவதற்காக முயன்ற அமெரிக்கா சர்வதேச தடைகளுக்கும் வழிவகுத்தது. எனினும் இத்தடை நீக்கப்பட ஈரானும் உலக வல்லரசும் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டன.
ஆனால், இந்த ஒப்பந்தத்திலிருந்து திடீரென வாஷிங்டன் வெளியேறிய நிலையில் ஒரு ஆண்டுக்குப் பின்னர் ஈரானும் அமெரிக்காவும் கடந்த மாதம் முதலே கடும் மோதலுக்குத் தயாராகி வருகின்றன.
வாஷிங்டன் மீண்டும் தடையை விதித்ததோடு, கடந்த மாதம் மீண்டும் கோபத்தின் உச்சத்திற்கே சென்றது. அதன்விளைவாக அனைத்து நாடுகளும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டாம் என உத்தரவிட்டது. சமீப வாரங்களாக ராணுவ மோதல்களுக்கும் தயாராகி வருகிறது. ஈரானின் அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்குப் பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா கூறியது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் போர் உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.