ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கப்பட்டது.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், ”ஜப்பானில் செவ்வாய்க்கிழமை இரவு 10.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 7 ஆகப் பதிவாகியது.
ஜப்பான் தலைநகரிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின. 26 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை விலக்கப்பட்டது” என்று செய்தி வெளியானது.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மக்கள் நெருக்கம் அதிக உள்ள இடங்களாக இருப்பதால் மீட்புப் பணியை உடனடியாக முடிப்பது சற்று சிக்கலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களிடம் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே கூறும்போது, “தன்னுடைய அரசு பிராந்தியத்தில் சாத்தியமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகபட்ச விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. குடிமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.