பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீதை நியமித்து பாக்.ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு ஐஎஸ்ஐ தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் அஸிம் முனிர் 8 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த நிலையில் திடீரென்று மாற்றப்பட்டுள்ளார்.
ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீதுக்கு கடந்த ஏப்ரல் மாதம் லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு அளித்தது பாகிஸ்தான் ராணுவம். அவரை தலைமை இடத்துக்கு துணைத் தலைவராக நியமித்தது. இந்நிலையில் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக பியாஸ் ஹமீதுவை திடீரென நியமித்து பாக்.ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐஎஸ்ஐ அமைப்பில் ஹமீது ஏற்கெனவே உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், ராணுவத் தளபதி குமார் பஜ்வாவுக்கு நெருக்கமாக இருந்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட,லெப்டினன்ட் ஜெனரல் முனீர், குஜ்ரன்வாலா பிரிவுக்கு தலைவராக மாற்றப்பட்டார். இதுவரை ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர்களாகப் பணியாற்றியவர்களில் மிகக் குறுகிய காலமாக 8 மாதங்கள் பணியாற்றியவர் முனீர் மட்டுமே.
கடந்த அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐ தலைவராக இருந்த லெப்டினனட் ஜெனரல் நாவித் முக்தர் ஓய்வு பெற்றபின் அவருக்குப் பதிலாக ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பு பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎஸ்ஐ பிரிவில் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் ஹமீதுக்கு இருப்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு சவால்களை எளிதாக சமாளிப்பார் எனத் தெரிகிறது.
புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் பல்வேறு சர்வதேச நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதையடுத்து, ஹபீஸ் சயத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன. தீவிரவாதக் குழுக்களுக்கான நிதியுதவி தடுக்கப்பட்டது. சர்வதேச சமூகத்தின் கவனம் அதிகரித்துள்ள நிலையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.