சோமாலியா தலைநகர் மொகாடிஷுவில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சினுவா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
நகரின் சயித்கா ஜங்ஷன் அருகே நடந்த இந்த தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்ததாக சோமாலியா காவல் ஆணையர் அப்டி முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நகரின் இன்னொரு பகுதியில் கே.எம் 4 ஜங்ஷன் அருகே தற்கொலைப் படையினரின் இன்னொரு கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் நடத்த வந்த குண்டுவெடிப்பாளர் பலியானர். இந்த வெடிவிபத்தில் காயமடைந்த அவருடைய கூட்டாளியை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் காவல்துறையினர் தலைநகரில் பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளனர். மேலும் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற வாய்ப்புகள் உள்ளதால் நகரின் பிரதான சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அல் கொய்தாவுடன் இணைந்து செயல்படும் அல் ஷபாப் தீவிரவாதக் குழு இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.