உலகம்

ஐ.எஸ்.ஐ.எஸ். மீது நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது: ஒபாமா

செய்திப்பிரிவு

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தனக்கு அதிகாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்த சில நேட்டோ நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்களுடன் அந்நாட்டு அதிபர் ஒபாமா பேச்சு நடத்தினார்.

அப்போது, "ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை உலகத்துக்கு நிரூபணம் செய்ய செனெட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால், அதனை நான் வரவேற்பேன்.

ஐ.எஸ்.-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அதனை முடிவு செய்வதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது.

ஆனால், அமெரிக்கா வலிமை மிக்க நாடு. என்னுடன் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விவகாரத்தில் ஆதரவு கொடுத்தால், நமது தேசத்துக்கு எதிராக பாதுகாப்பு அச்சுறுத்தலை அளித்துவரும் அந்த இயக்கத்தை வீழ்த்தலாம்" என்று அதிபர் ஒபாமா தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கார்னின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்த விவகாரத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஒபாமா விளக்கம் தர வேண்டிய நிறைய கேள்விகள் உள்ளன.

அமெரிக்க தேசத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், ஏன் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்? ஒபாமாவின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, இது குறித்து அமெரிக்க மக்களிடையே ஒபாமா விளக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT