உலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ளம்: 200 பேர் பலி

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் பஞ்சாப், ஆசாத் காஷ்மீர், பலுசிஸ்தான், வஜிரிஸ்தான் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 200 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளை அந்த நாட்டு அரசு ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கிறது. அங்கு கடந்த 8 நாள்களாக பெய்து வரும் மழையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். செனாப் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆசாத் காஷ்மீரின் பெரும் பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்திலும் கனமழை பெய்கிறது. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 556 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாதின் புறநகர்ப்பகுதி, பலுசிஸ்தான், வஜிரிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பிராந்தியங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

நவாஸ் ஷெரீப் ஆய்வு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நவாஸ் ஷெரீப் திங்கள்கிழமை விமானத்தில் ஆய்வு செய்தார். பின்னர் பல்வேறு மாகாண முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT