உலகம்

மோடியின் அமெரிக்க வருகையை எதிர்த்து போராட்டம்: அணி திரளும் அமைப்புகள்

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வருகையின்போது கருப்புக் கொடி ஆர்ப்பட்டம் நடத்த அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்துள்ளனர்.

நியூயார்க்கில் 26-ஆம் தேதி நடக்கவுள்ள ஐ.நா. மன்றக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதன் மறுநாள் (27–ஆம் தேதி) அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்.

தனை அடுத்து, இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கும் அவர் செல்லவுள்ளார். அவரது வருகைக்காக நியூயார்க்கில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஒருபுறம் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய அமைப்புகள் திட்டமிட்டு வரும் நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' முடிவு செய்துள்ளது.

அந்த அமைப்புடன் இன அழிப்புக்கு எதிராக போராடும் ஏ.ஜெ.ஏ. மற்றும் சில அமெரிக்க வாழ் இந்திய அமைப்புகள் இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' கூறும்போது, "2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை தூண்டிவிட்ட நரேந்திர மோடியின் வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். செப்டம்பர் 30-ஆம் தேதி வாஷிங்டனின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்கவுள்ளார். அப்போது, வெள்ளை மாளிகைக்கு எதிரே அமைந்திருக்கும் அதிபர் பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

அதே போல, ஏ.ஜெ.ஏ. அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கும் சீக்கிய குழுக்குகளுக்கும், "பிரதமர் மோடியின் வருகைக்காக கருப்புக் கொடி காட்டுவோம்" என்று அழைப்பு விடுத்துள்ளன.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை ரத்து செய்ய வேண்டும் என 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு மனு அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT