லிபியாவின் தென் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து லிபிய ராணுவம் தரப்பில், ''லிபியாவின் தென் பகுதியில் உள்ள கட்வா நகரில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பித்துவிட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை ராணுவப் பயிற்சி முகாமில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இதனையும் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
லிபியாவில் தென் பகுதியில் ஐஎஸ் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது.
முன்னதாக, எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபியக் கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார்.
அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.
கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் ஐஎஸ் அமைப்பு அங்கு வலுவாகக் காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.