டவுன் சிண்ட்ரோம் பாதிப்புக்கு ஆளான 16 வயது சிறுமியின் நடனம் கிண்டல் செய்யப்பட்டதை அடுத்து, உண்மையை அறிந்த நெட்டிசன்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டுஷைரைச் சேர்ந்தவர் நெய்ல் மர்க்காம். இவரின் 16 வயது மகள் எல்லா. டவுன் சிண்ட்ரோமால் (மரபணுக் கோளாறு காரணமாக உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு) பாதிக்கப்பட்டவர்.
எல்லாவுக்கு கால்பந்து என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் மர்க்காம், மகளை அழைத்துச் செல்வார். அதுபோல நியூ ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டிக்கு எல்லாவும் மர்க்காமும் சென்றனர். அங்கு குதூகல மிகுதியால், நடனமாடினார் எல்லா.
இதை வீடியோவாகப் பதிவு செய்த மர்க்காம், அதைத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டோடு எல்லா ஆடிய நடனத்தைப் பார்த்த நெட்டிசன்கள், கடுமையாக கிண்டல் செய்யத் தொடங்கினர்.
இதைக் கண்டு மனம் தளராத மர்க்காம், கிண்டலடித்தவர்களின் அக்கவுண்டுகளில் சென்று செய்தி அனுப்பினார். என் மகள் குறித்து எது சொல்லவேண்டுமென்றாலும் என்னிடம் நேரடியாகச் சொல்லுங்கள் என்று தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
உண்மையை அறிந்த நெட்டிசன்கள் வருத்தத்தால் மனம் வெதும்பினர். மர்க்காமிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டனர். இந்த செய்தியை அறிந்த பிரபலங்களும் எல்லாவுக்கும் மர்க்காமுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பாட்சி கென்சிட், முன்னாள் டென்னிஸ் வீரர்கள் கிரஹாம் ராபர்ட்ஸ் மற்றும் மிக்கி ஹசார்டு ஆகியோர் எல்லா ஓர் ஆச்சரியப் பிறவி என்று பாராட்டினர்.