தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. பொதுவாக தலைத்துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம், ஆனால் இதில் இருவரின் உடல்களை கம்பத்தில் தொங்க விட்டிருப்பது புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
அதுவும் 2 பேர் உடல்கள் பல மணி நேரம் கம்பத்தில் தொங்கியபடி கிடந்தது அங்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை, ஆனால் உள்துறை அமைச்சகம் இப்படிச் செய்தால்தான் பயம் வரும் என்று கூறியுள்ளது.
தண்டனை அளிக்கப்பட்டவர்கள் தீவிரவாதக் கொள்கைகளில் ஊறிப்போனவர்கள் வகுப்புவாதக் கொள்கைகளைப் பரப்பி வன்முறைகளைத் தூண்டினர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காகவென்றே உள்ள சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் தீவிர விசாரணைகளுக்குப் பிறகு இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்கிறது உள்துறை அமைச்சகம்.
இவர்கள் பாதுகாப்பு நிர்மாணங்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர், இதில் பாதுகாப்பு வீரர்கள் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். விரோதி அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தனர், நாட்டு நலன்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் ரியாத், மெக்கா, மெதினா, மற்றும் அசிர் பகுதிகளிலிருந்தும், குவாசிம் மற்றும் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த 37 தலை துண்டிப்பு மரண தண்டனை நிறைவேற்றங்களும் பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தலைதுண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சிலர் பெரிய குடும்பம் மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.