உலகம்

இலங்கையில்முகத்தை மறைக்கும் புர்கா ஆடைகளுக்கு தடை

செய்திப்பிரிவு

இலங்கையில்  முகத்தை மறைக்கும் விதமான புர்கா உள்ளிட்ட ஆடைகளை அணிய  அந்நாட்டு  அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அதிபர் சிறிசேனா வெளியிட்ட அறிக்கையில், “ அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை முகத்தை மறைக்கும் விதமான ஆடைகளை அணிய தடைவிதிக்கப்படுகிறது.  நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்தத் தடை போடப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டம் கல்முனை அருகே சாய்ந்த மருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்து போலீஸார், பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனையறிந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதலை நடத்தினர். இதில், வீட்டில் இருந்த 3 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT