உலகம்

இலங்கை குண்டுவெடிப்பு: பலியான வெளிநாட்டினர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான வெளி நாட்டினரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை ஊடகங்கள் தரப்பில், “ சீனாவைச் சேர்ந்த இரு வெளிநாட்டினர் மரணமடைந்ததை தொடர்ந்து இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களில் 11 பேர் இந்தியர்கள், 4 பேர் சீனர்கள், 3 பேர் டென்மார்க் மற்றும் ஜப்பான், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் அடக்கம்.

சிலரது உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன. மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டம் கல்முனை அருகே சாய்ந்த மருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்து போலீஸார், பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனையறிந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதலை நடத்தினர். இதில், வீட்டில் இருந்த 3 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர். இந்தத் பயங்கர தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT