உலகம்

லிபியா கடல் பகுதியில் விபத்து: படகுகள் மூழ்கி 700 பேர் பலி?

டிபிஏ

லிபியா கடல் பகுதியில் நிகழ்ந்த 2 வெவ்வேறு சம்பவங்களில் படகுகள் மூழ்கி 700 பேர் உயிரிழந் திருக்கலாம் என்று அஞ்சப்படு வதாக சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற சிரியா, பாலஸ்தீனம், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை மனித கடத்தல் கும்பல் ஒன்று லிபியா கடல் பகுதி வழியாக படகில் அழைத்துச் சென்றது.

மால்டா அருகே ஒரு படகிலிருந்து, மற்றொரு படகிற்கு 500 பேரையும் கடத்தல் கும்பல் மாற்ற முயன்றது. அந்த படகு மிகவும் சிறியதாக இருந்ததால், அதில் ஏறுவதற்கு 500 பேரும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மற்றொரு படகில் இருந்த கடத்தல் கும்பல் ஆத்திர மடைந்து, 500 பேர் இருந்த படகை தகர்த்து மூழ்கடித்துவிட்டு சென்றுவிட்டது.

தண்ணீரில் தத்தளித்த இருவரை அவ்வழியே சென்ற சரக்கு கப்பல் மாலுமிகள் கடந்த வியாழக்கிழமை மீட்டு இத்தாலிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் 9 பேரை கிரேக்கம், மால்டா நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றன. இந்த சம்பவத்தில் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதே போன்று, லிபியாவின் திரிபோலியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 240-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 200 பேர் உயிரிழந் திருக்கலாம் என்று அஞ்சப்படுகி றது.

40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக லிபியா கடற்படை செய்தித் தொடர்பாளர் காசிம் அயூப் தெரிவித் தார். கடல் பரப்பில் ஏராளமான சடலங்கள் மிதப்பதாகவும், தேவையான உபகரணங்கள் தங்களிடம் இல்லாததால் மீட்புப் பணியை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற கடல் வழியாக படகில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தோர்தான் இத்தகைய பயணத்தை மேற்கொள்கின்றனர்.

SCROLL FOR NEXT