இலங்கையில் ஈஸ்டரில் ஞாயிறு அன்று நடைபெற்ற கொடூர குண்டுவெடிப்புகளில் உள்ளூர் இஸ்லாமிய அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்புள்ளதாக அந்நாட்டு அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.
இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அரசு செய்தித்தொடர்பாளரும் கேபினெட் அமைச்சருமான ரஜிதா சேனரத்னே, ''சுமார் 300 பேரைக் கொன்ற தற்கொலைப்படைத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்புள்ளதாக இலங்கை அரசு நம்புகிறது. இந்த அமைப்பு உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஆகும்.
தவ்ஹீத் ஜமாத்துக்கு சர்வதேச உதவிகள் கிடைத்ததா என்பது குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது'' என்றார்.
இதுகுறித்து 'ஏஎப்பி' செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த ஆவணங்களின்படி, தேவாலயங்கள் மீதும் இந்தியத் தூதரகம் மீதும் தவ்ஹீத் ஜமாத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, கடந்த ஏப்ரல் 11-ம் தேதியே வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குறித்து அதிகத் தகவல்கள் வெளியாகாவிட்டாலும் புத்த சிலைகளை முற்றிலுமாக அழிப்பதில் தொடர்புடைய தீவிரவாத முஸ்லிம் அமைப்பு இது என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 பேரும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்'' என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இதுகுறித்து மேலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.