உலகம்

எபோலா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 2,917 ஆக அதிகரிப்பு

பிடிஐ

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,917 ஆக அதிகரித்துள்ளது. அங்கு மொத்தம் 6,263 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கினி நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் எபோலா வைரஸ் பரவத் தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை அந்நாட்டில் மட்டும் 1,022 பேர் எபோலா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 635 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து பலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சியோரா லியோனில் 1940 பேருக்கு எபோலா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 593 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக 34 சதவீதம் பேருக்கு எபோலா பரவியுள்ளது. எபோலா என்பது தீவிரமான ரத்த இழப்பால் உயிரை பறிக்கும் நோயாகும்.

ஒருவருக்கு எபோலா ஏற்படும் போது அறிகுறிகள் சாதாரண நோய் போலவே இருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டைவலி ஆகியவை ஏற்படும். பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழப்பு ஏற்படும். இதனால் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். நோயாளியின் உடலை இறுக்கமாக்குவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நோய்க்கு மருந்து கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதன் மூலமும், ரத்த இழப்பை சரிக் கட்டும் வகையில் உணவு முறை களை கடைப்பிடிப்பதன் மூலமும் காப்பாற்ற முடியும்.

SCROLL FOR NEXT