பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் வாழ்வதற்கு உகந்த சிறந்த சூழலை முஸ்லிம்கள் அளிக்கவேண்டுமென பாகிஸ்தானின் மூத்த மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.
சிந்து மாகாணத்தில் இந்துமத சிறுமிகள் கட்டாய மாத மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் முதாஹிதா உலேமா வாரியம் ஒரு இணைப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு மதத்தைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அவர்கள் கட்டாய மத மாற்றத்திற்கு தங்கள் கண்டனங்களை அக்கூட்டத்தில் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய பாகிஸ்தானின் மூத்த மதகுருமார்கள் இஸ்லாம் அல்லாதவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை இஸ்லாம் மதம் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
சிந்து மாகாணத்தில் இந்துமதத்தைச் சேர்ந்த சிறுமிகள் கட்டாய மதமாற்றம் மூலம் திருமணம் செய்துவைக்கப்பட்ட சம்பவத்தை அவர்கள் மறுக்கவில்லை. அதைத் தொடர்ந்து சட்டம் நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கு முதாஹிதா உலேமா வாரியம் மற்றும் பாகிஸ்தான் உலேமா கவுன்சிலின் தலைவர் முகம்மது தாஹிர் மெஹ்மூத் அஷ்ரஃபி தலைமை வகித்தார். இஸ்லாம் அமைதி, ஒற்றுமை, ஸ்திரத்தன்மையைப் போற்றும் மதமாகும். முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்அல்லாதவர்களின் உரிமைகளைப் பற்றி தெளிவாக வரையறுப்பதோடு இஸ்லாம் அவற்றை போதிக்கவும் செய்கிறது என்றார்.
இக்கூட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள், மௌலானாக்கள், பாதிரியார்கள், பாஸ்டர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு அவர்கள் விவாதித்தனர்.
தண்டனைச் சட்ட மசோதா
பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த இந்துமத எம்.பி ஒருவர் சில தினங்களுக்கு முன் கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கான இரு மசோதாக்கள் கொண்டுவந்தார். இதன்மூலம் கட்டாய மத மாற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனைகள் அமல்படுத்தப்படுகின்றன.