உலகம்

ஐ.நா. அமைதித் தூதராக டிகாப்ரியோ நியமனம்

செய்திப்பிரிவு

நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியானர்டோ டிகாப்ரியோ ஐ.நா. அமைதித் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ- மூன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பான் கீ- மூன் நேற்று முன்தினம் கூறியதாவது:

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிக்கு, இணைந்து குரல் கொடுக்கும்படி அவரை நான் வேண்டுகிறேன். சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக அவரின் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்கு உரியவை. குறிப்பாக அவரின் அறக்கட்டளை மூலமாக, இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு அவர் நிதி திரட்டி, உதவி வருவது பாராட்டத்தக்கது” என்றார்.

ஐ.நா. அமைதித் தூதராக தான் நியமிக்கப்பட்டிருப்பது கவுரம்மிக்கது என லியானர்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “பருவநிலை மாற்றத்துக்கு நாம் எவ்வாறு எதிர்வினை புரிகிறோம் என்பதுதான், எதிர்காலத்தில் மனித சமூகம் மற்றும் பூமியின் விதியைத் தீர்மானிப்பதாக அமையும்” என்றார். டிகாப்ரியோ 1998-ல், ‘லியானர்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை’யை நிறுவினார். அழிந்து வரும் வனப் பகுதிகளைப் பாதுகாப்பது, மனிதருக்கும், இயற்கைக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவது ஆகியவையே இதன் முக்கிய நோக்கம்.

SCROLL FOR NEXT