உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என மேற்கத்திய நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரும் போரை ரஷ்யா தொடங்கியுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, உக்ரைன் அருகேயுள்ள நேட்டோ படைகள் ஆயத்த நிலையில் உள்ளன. இந்நிலையில் பான் கீ மூன், அபாயகரமான சூழலைத் தவிர்க்கும்படி மேற்கத்திய நாடுகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நியூஸிலாந்தில் செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள், உக்ரைன் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதை நான் அறிவேன். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இப்பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. அரசியல் பேச்சுவார்த்தை, அரசியல் ரீதியான தீர்வு என்பதுதான் நிலையான வழியாக இருக்கும்” என்றார்.
கடந்த திங்கள் கிழமை, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் ஐரோப்பா ஒன்றியம் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அரசு, கிளர்ச்சியாளர்கள் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனிடையே, உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில், “ரஷ்யாவுக்கு எதிராகப் படைகளைக் குவிக்க வேண்டும். கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் பகுதி மட்டுமின்றி, உக்ரைனின் மற்ற பகுதிகளையும் கைப்பற்ற ரஷ்யா முயல்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பா பார்த்திராத மிகப் பெரும் போர் ஒன்று நம் வாசலில் காத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகக் கூடும்” என அவர் எச்சரிக்கை செய்திருந்தார். இதைத் தொடர்ந்தே, ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.