இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குழு நடத்தவுள்ள விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் ஜெயித் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை கவுன்சிலின் முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை ஆற்றிய பணிகளை அவர் பாராட்டினார்.
ஜெனீவாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அதன் தலைவர் ஜெயித் அல் ஹுசைன் பேசியதாவது: “நீதியை நிலைநாட்டும் வகையிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச குழு நடத்த வுள்ள போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அந்நாட்டிலுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல்கள் கவலையளிக்கிறது. இலங்கையில் சமீபகாலமாக சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அறிந்து வருத்தமடைந்துள்ளேன்.
எனக்கு முன்பு தலைவராக இருந்த நவநீதம் பிள்ளை, நியாயமாக செயல்பட்டார். இதனால், பல நாடுகளின் அதிருப்திக்கு ஆளானார். பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தியே அவரின் செயல்பாடுகள் இருந்தன. நானும் அதே வழித்தடத்தில் பயணம் செய்யவுள்ளேன்” என்றார்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ராணுவம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.