உலகம்

ஒசாமா பின்லேடன் மகன் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

பிடிஐ

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி(ஒரு மில்லியன் டாலர்) பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் தீவிரவாதத்தில் ஹம்சா பின்லேடனின் பங்கு முக்கியமாக இருக்கிறது என்பதால், அமெரிக்கா இந்த அறிவிப்பை எடுத்துள்ளது.

ஜிகாத்தின் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்படும் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன், பாகிஸ்தானில், வசிப்பதாகவும், ஆப்கானிஸ்தானில் வசிப்பதாகவும், சிரியாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்னும் உறுதியான தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில், அவர் குறித்த தகவலை அறிய இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பின் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாகத் தேடி வந்தது. பாகிஸ்தானில் அபோதாபாத்திதல் பதுங்கி இருந்த ஒசாமாவை அமெரிக்கப் படையினர் 2011, மே மாதம் சுட்டுக்கொன்றனர்.

ஒசாமா பின்லேடனுக்கு 3 மனைவிகளும், அவர்களுக்குக் குழந்தைகளும் உள்ளனர்.  ஒசாமா மறைவுக்குப் பின், அவர்கள் சவுதி அரேபியாவில் குடியேறிவிட்டதாகக் கூறப்பட்டது. அதில் ஒரு மனைவியின் மகன்தான் ஹம்சா பின்லேடன்.

ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் சுட்டுக்கொன்ற பின், வீடியோ ஒன்றில் 2015-ம் ஆண்டு பேசி இருந்த ஹம்சா பின்லேடன், தனது தந்தையின் சாவுக்குக் காரணமானவர்களை அழிக்காமல் விடமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின் தனது தந்தையின் தடத்தைப் பின்பற்றி, அல்கொய்தா அமைப்புக்கு ஹம்சா சென்றதாகக் கூறப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து ஈரானுக்கு ஹம்சா பின்லேடன் சென்று அங்கு தனது தாயுடன் வசித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஈரானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சன்னி முஸ்லிம்கள் தாக்குதலில் இருந்து காக்க அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஆண்டு 'தி கார்டியன்' நாளேட்டுக்குப் பேட்டி அளித்த ஹம்சா  பின்லேடனின் சகோதரர், தனது சகோதரர் ஹம்சா ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறினார். இதனால், தற்போது ஹம்சா எங்கு வாழ்ந்து வருகிறார் எனத் தெரியவில்லை.

இந்த சூழலில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது இணையதளத்திலும், ட்விட்டரிலும் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரும்  மறைந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி(10லட்சம் டாலர்) பரிசு அளிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT