எஃப்-16 விமானத்தை பாகிஸ்தான் தவறான முறையில் பயன்படுத்தியது தொடர்பான தகவல்களை நெருக்கமாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எஃப்-16 விமானங்களை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இதற்கான ஒப்பந்தத்திலும் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.
ஆனால் தற்போது அந்த விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது என்று இந்திய ராணுவம் தரப்பில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு தாங்கள் எப்-16 விமானம் எதையும் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க தரப்பில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பதிலளிக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவு விவகாரத் துறை துணை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் பாலன்டினோ, ”அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானத்தை பாகிஸ்தான் முறை தவறி பயன்படுத்தியுள்ளதாக வந்த தகவல்கள் குறித்து நாங்கள் நெருக்கமாக கவனித்து வருகிறோம்.
இதுபற்றி நாங்கள் இப்போது எதனையும் உறுதியாக கூறமுடியாது. எங்கள் கொள்கையின்படி அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சம்பந்தப்பட்ட பிற நாடுகளுடான எங்களது உடன்பாடு பற்றி நாங்கள் வெளிப்படையாக கூற முடியாது. தற்போது இத்துடன் முடிந்து கொள்கிறேன்” என்றார்.