மக்கள் நிறைந்த இருண்ட நெடுஞ்சாலையில் கட்டுக்கடங்காமல் வந்த லாரி மோதியதால் 30 பேர் பலியான சம்பவம் கவுதமாலா நாட்டில் நேற்றிரவு நடந்துள்ளது.
இத்துயரச் சம்பவம் குறித்து சோலோலா மாகாணத்தைச் சேர்ந்த நஹுலா நகராட்சி தீயணைப்புத்துறை செய்தித் தொடர்பாளர் செசிலியோ சாக்காஜ் தெரிவித்ததை மேற்கோள் காட்டி பாக்ஸ்நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:
நெடுஞ்சாலை ஒன்றில் விபத்தொன்றில் கொல்லப்பட்ட ஒரு நபரைக் காண ஏராளமான பேர் குழுமியிருந்தனர். அப்போது அவ்வழியே கனரக சரக்கு லாரி ஒன்று படுவேகத்துடன் வந்துகொண்டிருந்தது.
நெடுஞ்சாலையில் எவ்வித விளக்கொளியும் இல்லாமல் இருட்டாக இருந்ததால் கட்டுக்கடங்காத வேகத்துடன் வந்த லாரி எதிர்பாராத விதமாக குழுமியிருந்த மக்கள் மீது மோதியது. இதனால் அங்கிருந்தவர்களில் கிட்டத்தட்ட 30 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு தீயணைப்புத்துறை செய்தித் தொடர்பாளர் செசிலியோ சாக்காஜ் தெரிவித்தார்.
கவுதமாலா அதிபர் இரங்கல்
இக்கோர விபத்து குறித்து, கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் ட்வீட் செய்த பதிவில், ''இத்துயரச் சம்பவத்தில் பலியானோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளும் அரசு செய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.