நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு மசூதியில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 பேராக உயர்ந்துள்ள நிலையில், அதில் 5 பேர் இந்தியர்கள் என்பதை அங்குள்ள இந்தியத்தூதரகம் உறுதி செய்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு மசூதியில் வெள்ளிக்கிழமை மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு பெண் அடங்கும்.
வெள்ளை இனவெறி பிடித்த தீவிரவாதி ஒருவர், துப்பாக்கியால் சுடுவதை ஃபேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். அதன்பின் அவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ததில், ஆஸ்திரேலியாவில் பிறந்த பிரன்டன் டாரன்ட்(வயது28) என்பது தெரிந்தது.
இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 9 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர், ஆனால், 5 பேர் கொல்லப்பட்டதை மட்டும் நியூசிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், " கிறிஸ்ட்சர்ச் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 5 இந்தியர்கள் தங்களின் விலை மதிப்பற்ற உயிரை இழந்துள்ளார்கள். இதை மிகுந்த வேதனையுடன், கனத்த இதயத்துடன் பதிவிடுகிறோம். அவர்களில் மெகபூப் கோக்கர், ரமீஸ் வோரா, ஆசிப் வோரா, அன்சி அலிபாபா, குவாசிர் காதிர் என்பது அடையாளம் தெரிந்தது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நியூசிலாந்து தாக்குதலில் உறவினர்களை இழந்தவர்கள் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 021803899 & 021850033 இந்த எண்களில் 24 நேரமும் தொடர்பு கொண்டு உதவி கோரலாம். மேலும், ஆக்லாந்திலும் 021531212 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி, தாக்குதல் நடத்தும் முன், 74 பக்கத்தில் கோரிக்கை மனு ஒன்றை நியூஸிலாந்து பிரதமர் உள்ளிட்ட சிலருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதில் என்ன குறிப்பிடப்பட்டு இருந்தது என்பதை தெரிவிக்கவில்லை.
நியூஸிலாந்தில் ஏறக்குறைய 2 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 30 ஆயிரம் பேர் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.