உலகம்

புல்வாமா தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய சமூகத்தினர் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இந்திய சமூகத்தினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்களில், ''ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அபுதாபியில் உள்ள வெளியுறவுத் தூதரகத்துக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்'' என்று செய்தி வெளியானது.

இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற வெளியுறவுத் தூதரக அதிகாரி நவ்தீப் சூரி கூறும்போது, ''நமது பிரதமர் நம்மிடையே பேசினார். தேசத்தின் ரத்தம் கொதிக்கிறது. தீவிரவாதிகளும் , அவர்களது தலைவர்களும் பெரும் தவறைச் செய்து விட்டனர். இதற்கான பரிசை அவர்கள் பெற்றே  தீருவார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினர் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் இந்தியர்களே இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்று வதந்தி பரப்பப்படுகிறது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நமது ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய சமூகத்தினர் கோபமும், வருத்தமும் கொண்டுள்ளனர்'' என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT