ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளுக்கு பாகிஸ்தான் கண்டிப்பாக கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது, நிதியுதவி செல்வதை தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் என்பதையும், அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்திய அரசு அளித்தது.
அந்த ஆதாரங்களில், புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு இருக்கும் பங்கினையும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஈடுபட்டுள்ளது உள்ளிட்ட ஆதாரங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தபின் அமெரிக்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: " கடந்த 14-ம் தேதி புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது எல்லைதாண்டி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் பாகிஸ்தான், அதன் கடமைகளுக்கும், விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு புகிலிடம் அளிப்பதையும், நிதியுதவி கிடைப்பதையும் தடுக்க வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பதற்றத்தை தனித்து, ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும். ஆசியப் பிரந்தியாத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.