அமெரிக்காவின் பொருளாதார வெற்றிகளைத் தொடர வேண்டுமெனில் காலங்காலமாக இருந்து வரும் மோசமான வர்த்தகக் கொள்கைகளை தலைகீழாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண்டுக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
“அமெரிக்க வேலைகளையும் செல்வங்களையும், நம் அறிவுசார் சொத்துரைமைகளையும் திருடிச்செல்லும் சீனா, நம் தொழிற்துறையைக் குறிவைத்தது இனி முடியாது, அனைத்தும் முடிவுக்கு வந்தது என்று நாம் சீனாவுக்கு தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளோம்.
ஆகவேதான், சீனப் பொருட்கள் மீது சமீபத்தில் 250 பில்லியன் டாலர்கள் கூடுதல் கட்டணத்தைச் சுமத்தினோம். இப்போது நம் கஜானாவுக்கு மாதாமாதம் சீனாவிலிருந்து கோடிகோடியாகக் கொட்டிக் கொடுக்கிறார்கள். இதற்கு முன்னால் நமக்கு ஒன்றையும் அவர்கள் கொடுத்ததில்லை” என்று காங்கிரஸ் கூட்டு அமர்வில் ட்ரம்ப் உரையாற்றும்போது தெரிவித்தார்.
கட்டணங்களை சுமத்தியதால் அமெரிக்கப் பொருட்கள் சீனப் பொருட்களை விட மலிவாகக் கிடைக்கிறது என்று கூறிய ட்ரம்ப், தான் சீனாவைக் குறை கூற மாட்டேன் என்றும் இதற்கு முன்னால் ஆண்ட அமெரிக்கத் தலைவர்களின் தவறுகள் அவை என்றும் தெரிவித்தார்.