மெக்ஸிகோவில் நட்சத்திர உணவு விடுதியில் இருந்த பத்திரிகையாளர் ஒருவரை நேற்றிரவு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பத்திரிகையாளர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஒருவர் ஒருவர் ஏஎப்பியிடம் தெரிவித்தாவது:
''மெக்ஸிகோ கிழக்குப் பகுதியில் உள்ளது டபாஸ்கோ மாகாணம். இங்கு மிலியானா சபாதா என்ற நகரத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றது.
காரில் வந்திறங்கிய சிலர் உணவு விடுதிக்குள் நுழைந்து திடீரென அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஜீசஸ் ராமோஸ் ரோட்ரிக்ஸை எட்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரோட்ரிக்ஸ் உயிரிழந்தார்.
ரோட்ரிக்ஸ் உள்ளூர் 99.9 எப்.எம். பத்திரிகையாளர். கடந்த 10 ஆண்டுகளாக அந்த வானொலியிலேயே செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
பாஜா கலிபோர்னியா சர் மாகாணத்தில் சமுதாய வானொலி இயக்குநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மெக்ஸிகோ அரசாங்கம் பாதுகாப்பு அளித்து வந்த நிலையிலும் இக்கொலை குறித்து அதிர்ச்சி உருவானது. அதேபோல இன்னொரு பத்திரிகையாளர் ரஃபேல் மியூருயா, அவரது செய்திகளுக்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பிறகு அவரது உடல் ஒரு சாக்கடைக் கால்வாயிலிருந்து கடந்த ஜனவரி 20 அன்று கண்டெடுக்கப்பட்டது.
உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் இது''.
இவ்வாறு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
உலகின் மூன்றாவது அபாயகரமான நாடு
மெக்ஸிகோவில் இளைஞர்கள் மத்தியில் போதை மருந்து நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு வன்முறை தாண்டவமாடி வருவதற்கு போதை மருந்து நடமாட்டமும் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
அரசியல் தலையீடுகளாலேயே காவல்துறை பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்ற நிலையில் அங்குள்ள பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து இதனை விமர்சித்தும் எதிர்த்தும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில்தான் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த 2000லிருந்து கிட்டத்தட்ட 140 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டுமே 11 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 2018ல், 'வாச்டாக் ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்ட்டர்ஸ்' என்ற அரசு சாராத உலகளாவிய கண்காணிப்பு இயக்கம் ஒன்று, போர் நிகழ்ந்து வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான நாடாக மெக்ஸிகோ விளங்குவதாக தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோவில் நடைபெற்றுவரும 90 சதவீதத்திற்கும் அதிகமான வன்முறைக் குற்றங்கள் போதை மருந்து கடத்தல் மற்றும் அரசியல் தொடர்பானவை. இதில் பெரும்பாலான வழக்குகளில் தண்டனைகள் ஏதும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்பதுதான் சோகம்.