உலகம்

விஷமிகளால் வெளியிடப்பட்ட பிரபலங்களின் அந்தரங்க படங்கள்: நடிகைகளுக்கு வல்லுநர்கள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தனிப்பட்ட அந்தரங்க கோப்புகளாக கருதப்படும் எதையும் பிரபலங்கள் இணையத்தில் பகிர வேண்டாம் என்று ஹாக்கர்களால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களுக்கு சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 31- ஆம் தேதி, ஜெனிபர் லாரன்ஸ், கதே அப்டான், எலிசபெத் வின்ஸ்டெட், கிம் கர்த்ஷியன், செலீனா கோமெஸ், விக்டோரியா ஜஸ்டிஸ் என 100-க்கும் அதிகமான பிரபல ஹாலிவுட் நடிகைகளின் தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. இவை அனைத்தும் அதி வேகத்தில் இணையத்தில் பரவியதால், சர்ச்சை கிளம்பியது.

பிரபலங்களின் படங்களுடன் ஹாக்கர் குறிப்பிட்ட பதிவில், " நான் விரைவில் வேறு இடத்திற்கு மாறிச் சென்று, இது போன்ற பதிவுகளை செய்யும் வேலையை தொடர்வேன்.

உங்களுக்கே தெரியும், இது எனது தனிப்பட்ட விருப்பத்திற்காக செய்தது இல்லை. இதில், பலரது பல மாதக் கால உழைப்பு அடங்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதலாவதாக, தனது தனிப்பட்ட புகைப்படம் ஹாக்கர்களால் வெளியிடப்பட்டதாக நடிகை ஜெனிபர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து மேரி வின்ஸ்டெட், "எப்போதோ நான் அழித்த படங்கள் எல்லாம் இப்போது வெளியாகி உள்ளன. இதனை வெளியிட ஹாக்கர்கள் மிகுந்த வேலை செய்திருக்கின்றனர். எங்களில் பெரும்பாலானோர் ஹாக் செய்யப்பட்டுள்ளோம்" என்றார்.

பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கத்தே அப்டான், ஜெனிபர் லாரன்ஸ் ஆகியோர் சட்ட ரீதியில் இந்த பிரச்சினையை கையாள, அமெரிக்க புலனாய்வு மையத்தின் சைபர் பிரிவிடம் புகார் அளித்தனர்.

100- க்கும் மேற்பட்ட ஹாலிவுட் பிரபலங்களின் அந்தரங்க படங்கள் ஹாக்கிங் செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு மையத்தின் சைபர் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் இந்த படங்கள் அனைத்தும் போஃரம் 4ஷேன் என்ற இணையதளத்தின் வழியாக ஹாக்கர்களால் வெளியிடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த விவகாரம் குறித்த முதல் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்பட கோப்புகள் அனைத்தும் ஆப்பிள் ஐ-கிளவுடு மூலம் பெறப்பட்டு, போஃரம் 4ஷேன் இணையதளத்தில் பதிவாகி பின்னர், பலரால் பகிரப்பட்டுள்ளது. பிரபலங்கள் குறித்து கோப்புகள் ஹாக்கர்களால் பல முறை திருடப்பட்டாலும், நூற்றுக்கணக்கான பிரபலங்களின் தனிப்பட்ட படங்கள் ஹாக்கர்களால் கசியவிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

சைபர் உலகில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை அமெரிக்க தேசிய புலனாய்வு மையம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே இது குறித்து ஹாலிவுட் வட்டாரத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகள் கூறும் கேரி செம்போ, "ஐ-கிளவுடு என்பது உங்களது கோப்புகளை சேமித்து வைக்கும் செயலி மட்டுமே. உங்களது தனிப்பட்ட விவரங்களை கண்டறிந்து பாதுகாக்காது. சேமிப்பு அறைகளுக்கு சாவி இருக்கும். அதே நேரம் அந்த சாவிக்கு ஒருவர் மட்டுமே சொந்தக்காரர் என்று நினைக்கக் கூடாது.

சுருக்கமாக கூற வேண்டுமென்றால், தனிப்பட்டதாக கருதும் எதனையும் ஆன்லைனில் பகிர வேண்டாம். அதனை எப்படியும் தவறாக உபயோகித்து விடலாம்" என்று அறிவுரை கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT