அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று மெக்சிகோ எல்லையில் எல்லைச் சுவர் அமைப்பது. அதன் விளைவே வணிக ரீதியாக நோக்கம் கொண்ட ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரியை தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்தது. .
தனது வெற்றிக்கு முக்கிய ஆயுதமாக இருந்த மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் வாக்குறுதியை நிறைவேற்ற தற்போது தீவிரமாக இருக்கிறார் ட்ரம்ப்.
மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு தேவயான நிதி ( 5.7 பில்லியன் டாலர்) ஒதுக்கும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைகளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்த்து அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
இதன் காரணமாக தொடர்ந்து இருபது நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் அரசு பணிகள் முடக்கப்பட்டுள்ளது (கிட்டதட்ட 8 லட்சம் அரசு பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்) .
அரசு பணி முடக்கத்தை சரிசெய்ய ட்ரம்புக்கும், குடியரசுக் கட்சி தலைவர்களுக்கு இடையே இவ்வாரம் நடத்த பேச்சு வார்த்தை மோசமான தோல்வியில் முடிந்தது.
இதன் காரணமாக அமெரிக்காவில் அரசு பணி முடக்கம் தொடர்கிறது. மேலும், இது தொடர்ந்தால் அமெரிக்காவில் அரசு பணிகள் அதிக நாட்கள் முடக்கப்பட்டது அதிபர் ட்ரம்ப் ஆட்சியில்தான் என்ற பெருமைக்கு உரியவராக காத்திருக்கிறார் ட்ரம்ப்.
மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த முடிவுக்கு ’இது வெறுப்பின் சுவர்’ என்று எதிர்ப்பு எந்த அளவு அமெரிக்காவில் பரவலாக இருக்கிறதோ அதே அளவு கணிசமான ஆதரவும் ட்ரம்ப்புக்கு இருக்கிறது.
எதிர்ப்புகள் எவ்வாறு இருப்பினும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியாவது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பி விட மேண்டும் என்ற தீவிரத்தில் ட்ரம்ப் இருக்க இதுதான் தனது கடைசி வாய்ப்பு என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டன், ஒபாமா ஆகியோர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த எல்லைச் சுவர்
மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறி, இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமெரிக்காவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாட்டு எல்லையில் ஏறிக்கடக்க முடியாத, நுழைய முடியாத, உயரமான, பெரிய, உறுதியான எல்லைத் தடுப்புச் சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார்.
இதற்கான ஒப்பந்தங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த எல்லைத் தடுப்புச் சுவரின் செலவுகளை மெக்சிகோ ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறி வந்தார் ஆனால் மெக்சிகோ அரசோ இதனை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது சுவருக்கான நிதியை பெறுவதில் ஜனநாயகக் கட்சியினருக்கு தொடர்ந்து ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து பல எதிர்ப்புக்களுக்கிடையே சிரியா, இராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு பயணிகளுக்கு விசா தடை, குடியுரிமை கொள்கையில் மாற்றம் எனதொடர்ந்து பிடிவாதத்தால் நிறைவேற்றி வரும் ட்ரம்ப் மெக்சிகோ எல்லையில் சுவரை அமைப்பாரா? என்பதை பொறுதிருந்துதான் காண வேண்டும்.