உலகம்

ஜேம்ஸ் பாண்ட் பட புகழ் வில்லன் மறைவு

செய்திப்பிரிவு

துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் 'ஜாஸ்' எனும் பெயரில் வில்லனாக நடித்த ரிச்சர்ட் கீல் புதன்கிழமை இறந்தார். அவருக்கு வயது 74.

ஜேம்ஸ் பாண்ட் படங்களான `தி ஸ்பை ஹூ லவ்ட் மீ' மற்றும் `மூன்ரேக்கர்' ஆகிய இரண்டு படங்களில் இரும்புப் பற்கள் கொண்ட வில்லனாக `ஜாஸ்' எனும் கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் கீல் நடித்தார். அதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். இந்த இரு படங்களும் முறையே 1977 மற்றும் 1979ம் ஆண்டு வெளியாயின. இவற்றில் ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.

அமெரிக்காவில் டெட்ராய்ட் எனும் பகுதியில் பிறந்த ரிச்சர்ட் கீல் 7 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு இரவு நேர கேளிக்கை விடுதிகளில் பாதுகாவலராக‌ப் பணியாற்றினார். அதன் பிறகு `தி மேன் ஃப்ரம் யூ.என்.சி.எல்.இ', `தி வைல்ட் வைல்ட் வெஸ்ட்' ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

தனது `ஜாஸ்' கதாபாத்திரம் குறித்து பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளிக்கும்போது, "மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து இந்த 'ஜாஸ்' கதாபாத்திரம் வேறுபட இரும்புப் பற்கள் முக்கியம் என்று தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்தேன். அந்தக் கதாபாத்திரம் பலரால் விரும்பப்பட்டது" என்றார்.

`ஜாஸ்' கதாபாத்திரம்தான் அவருக்கு ஓர் அடையாளத்தைத் தந்தது எனினும் அதைத் தன்னுடைய சாதனையாக அவர் நினைக்கவில்லை என்றார்.

"அந்தக் கதாபாத்திரம் எனது சிறப்பான பங்களிப்பு என்று நான் நினைக்கவில்லை. எனது சிறந்த பங்களிப்பு என்பது `போர்ஸ் 10 ஃப்ரம் நவரோன்' என்ற திரைப்படத்தில் வரும் கேப்டன் த்ரசாக் எனும் கதாபாத்திரம்தான். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது நான் தான் என்பது பலருக்குத் தெரியாது. காரணம் அதில் நான் பெரிய தாடி மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்திருந்தேன். ஜாஸ் கதாபாத்திரம் கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறும். இந்தப் படத்தின் கதாபாத்திரமோ நல்லவனாக இருந்து கெட்டவனாக மாறும்" என்றார்.

அதே `ஜாஸ்' கதாபாத்திரத்தில் 1999ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் அல்லாத `இன்ஸ்பெக்டர் கேட்ஜெட்' எனும் திரைப்படத்தில் நடித்தார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் `தி ஜெயின்ட் ஆஃப் தண்டர் மவுன்டெயின்' எனும் திரைப்படத்தை வேறொருவருடன் இணைந்து எழுதி அதைத் தயாரிக்கவும் செய்தார். இவர் 2002ம் ஆண்டு 'மேக்கிங் இட் பிக் இன் தி மூவிஸ்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை வெளியிட்டார்.

SCROLL FOR NEXT