உலகம்

எபோலா பாதிப்பு அதிகரிக்கும்: ஐ.நா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

எபோலா நோயை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கு முன் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிரிக்கும் என்று ஐ.நா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எபோலா குறித்த தவறான தகவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும், இந்த நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக் கைகள் தேவை என்றும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பும் உலகம் முழுக்க பீதியும் ஏற்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் எபோலா நோயின் தாக்கம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

லைபீரியா, கினி, நைஜீரியா, சியேரா லியோன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தாக்குதலுக்கு இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டதில் பலர் இறந்துள்ளனர்.

“தொடக்க நிலையிலேயே இந்நோயை கண்டுபிடித்து மருத்துவம் பார்த்தால் பிழைக்க வழியுண்டு. பாதிக்கப்பட்ட வர்களில் 50 சதவீதம் பேர் பிழைத்துள்ளனர். இந்நோய் பற்றிய பயம் உலகமெங்கும் உள்ளது. தவறான புரிதல்கள்தான் அதிகம் உள்ளன. மக்கள் அறிவியல்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்” என்று ஐ.நா அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“கடந்த 40 ஆண்டுகளில் எபோலாவின் தாக்கம் இப்போது தான் கடுமையாக இருக்கிறது. இதை ஆப்பிரிக்க நோய் என்று அடையாளப்படுத்துவது தவறு. எபோலா நோயை தடுப்பதும் அதன் தாக்கத்தை கட்டுப்படுத் துவதும் அனைவரின் கடமை. ஒவ்வொரு நாடும், அரசு சாரா நிறுவனங்களும் எபோலா தொடர் பான பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் மார்கரெட் சான் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT