எம்.எச் 370 விமானத்தின் நொருங்கிய பாகங்கள் விழுந்ததாக கருதப்படும் கடற்பகுதியில் மீண்டும் சிக்னல்கள் கண்டறியப்பட்டது. இதனால், தேடலில் முன்னேற்றம் உள்ளதாக ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரி அங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில், "ஆஸ்திரேலிய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலின் நீள்உருளை வடிவிலான சோனார் கருவி இன்று இரண்டு சிகனல்களை கண்டறிந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாம் சரியான தேடுதல் பாதையில் தற்போது உள்ளோம் என்பது தெளிவாகியுள்ளது. எனினும் விமானம் தொடர்பாக தடயங்கள் தென்படும்வரை அதிகாரப்பூர்வமாக முன்னேற்றத்தை தெரிவிக்க இயலாது. எம்.எச் 370 தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்று உறுதியுடன் எதிர்பார்க்கிறோம்.
சில தினங்களில் விமானம் அல்லது விமானத்தின் எஞ்சிய பாகங்கள் தொடர்பான தகவல் கிடைக்கும் என்பதை நம்பிக்கையுடன் கூறலாம். விமானம் விழுந்த பகுதியை நமது குழுவினர் நெருங்கிவிட்டனர். சிக்னல் தொடர்பாக அதிகாரப்பூர்வ சான்றுகள் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து கிடைத்த பிறகு அவை வெளியிடப்படும்" என்றார் அவர்.
கடந்த சனிக்கிழமை அன்று முதன்முறையாக சிக்னல் ஒன்றை இங்கிலாந்தின் கண்காணிப்புக் கருவியில் பதிவு செய்தது. இதனை அடுத்து சிக்னல் கிடைக்கப்பட்ட இடத்திற்கு ஆளில்லா சோனார் நீர்மூழ்கி இயந்திரம் விரைந்தது,
இந்த நிலையில், இன்று மீண்டும் சிக்னல்கள் கிடைத்துள்ளது தேடலில் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. தற்போது சிகனல்கள் கிடைத்த இடத்தை மையமாக கொண்டு கடற்படை ஆராய்ச்சியாளர்கள் தங்களது பணியை தொடர உள்ளனர்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சம்பவ கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.