கடந்த அக்டோபரில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தின் விமானிகள் அறையின் குரல்பதிவுக் கருவி ஒன்று கடற்படையின் நவீன சாதனங்களின்மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் மேலும் பல உண்மைகள் தெரிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 29-ல் லயன் ஏர் விமானத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ஜெட் ஜகார்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஜாவா கடலில் பாய்ந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து இந்தோனேசிய கடல்வழி போக்குவரத்து அமைச்சர் ரிட்வான் ஜமாலுதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ''189 பயணிகளை காவு வாங்கிய விமான விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விபத்துக்குள்ளான விமானத்தின் முக்கிய பாகங்களைக் கண்டறியும் பணி நடைபெறுகிறது. அதன் எஞ்சிய சில பகுதிகள் தற்போது கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இத்தகவல்கள் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவரிடம் இன்று காலை (திங்கள்கிழமை) நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் விபத்து குறித்த முக்கிய உண்மைகளைக் கண்டறிய முடியும்'' என்றார்.
குரல்பதிவுக் கருவி
இந்தோனேசியாவின் கப்பற்படையின் மேற்குப் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் லெப்.கலோ.அகாங் நக்ரோஹோ தெரிவிக்கையில், ''இத்தேடுதல் பணியில் பல்வேறு வகையான நவீன உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் கடலின் 8 மீட்டர் ஆழ சேற்றில் குரல் பதிவுக் கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
காக்பிட் புள்ளிவிவரப் பதிவு விபத்துக்குள்ளான சில நாட்களில் மீட்கப்பட்டது. அதில், ஜெட் விமான காற்றோட்டக் காட்டி அதன் கடைசி நான்கு விமானங்களில் தவறாகச் செயல்பட்டுள்ளது என்பதைக் காட்டியது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குரல்பதிவுக் கருவி சேதமடையாமலிருந்தால், இதன்மூலம் விசாரணை அதிகாரிகளுக்கு முக்கியமான கூடுதல் தகவல்களை வழங்க முடியும்.