ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானில் மத்தியப் பகுதியிலுள்ள வார்டக் மாகாணத்திலுள்ள ராணுவத் தளத்துக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) காலை காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது.
தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்களில் மூன்று பேர் தீவிரவாதிகள்'' என்று தெரிவிக்கப்பட்டது.
தலிபான் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.