உலகம்

அமெரிக்காவில் தேடப்பட்ட குற்றவாளி; ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தானாக சரணடைந்த சம்பவம்: திரைப்படத்தை மிஞ்சிய சுவாரஸ்யம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில்  போலீஸாருக்கும் குற்றவாளிக்கும் இடையே ஃபேஸ்புக்கில் நடந்த உரையாடல் ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.

வாஷிங்டனில் உள்ள ரிச்லாண்ட் பகுதி போலீஸார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், ஆண்டனி அக்கேர்ஸ் (38) என்பவர் போலீஸாரால் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் எங்களை 09-628-0333 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று அவரது புகைப்படத்துடன் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அந்தப் பதிவின் கீழே தேடப்பட்ட குற்றவாளி ஆண்டனி, “சற்று பொறுமையாக இருங்கள்...  நானே சரணடையப் போகிறேன்” என்று பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இதற்கு போலீஸார் தரப்பில், ”உங்களைக் காணவில்லை. உங்களுக்கு சிரமம் இருந்தால் நாங்கள் பதிவிட்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நாங்களே உங்களை அழைத்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆண்டனி, ’’மிக்க நன்றி. நான் இரண்டு நாட்களுக்குள் சரணடைந்து விடுவேன்” என்று கூறினார்.

இது நடந்த சில தினங்களுக்குப் பின்னர் அந்தப் பதிவில் ஆண்டனி சரணடைந்து விட்டாரா என்று நெட்டிசன்கள் போலீஸாரிடம் கேட்க அவர்கள் இல்லை என்று பதிவிட்டுள்ளனர்.

இதற்கு ஆண்டனி பதிலளித்திருக்கிறார். ”அதில், எனக்கு இங்கு வேலை தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளன.  நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  நாளை மதிய உணவுக்குள் நான் வந்துவிடுவேன். நீங்கள் என்னை நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். இருப்பினும் நான் உறுதி அளிக்கிறேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு தருவதற்கு நான் முன் கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன்.

நீங்கள் மிகவும் நல்லவர்கள் என்று பதிவிட,  அதற்கு போலீஸார் இனியும் உங்களை நம்பும் நிலையில் நாங்கள் இல்லை. எங்களது எண்னை தொடர்புக் கொள்ளுங்கள் நாங்கள் உங்களிடம் வருகிறோம் என்று கூறினர்.

இறுதியாக போலீஸாரின் அலுவலகத்துக்கு உள்ளே உள்ள லிப்டில் நின்றபடி தனது புகைப்படத்தைப் பதிவிட்டு கீழே  நான் வந்து விட்டேன் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடல் அமெரிக்க சமூக வலைதளங்களில் மிக வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT