பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்துக் கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்து, மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்தியர் சரப்ஜித் சிங்கை கொன்றதற்கான வலுவான ஆதரங்கள் இரு குற்றவாளிகளுக்கு எதிராக இல்லை என்று கூறி நீதிபதி மொயின் கோகர் விடுவித்து உத்தரவிட்டார்.
கடந்த 1990-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்தார் என்று கூறி சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்தியாவுக்காக உளவு பார்க்க அனுப்பப்பட்டார் என்று குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், குடிபோதையில் சரப்ஜித் சிங் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டார் என்று அவரின் குடும்பத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், உளவுபார்க்க வந்த குற்றத்துக்காக சரப்ஜித் சிங்குக்கு 16- ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு, மே மாதம் லாகூரில் உள்ள கோட் லோக்பத் சிறையில் சரப்ஜி சிங் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது, சிறையில் இருந்த சக கைதிகளால் சரப்ஜித் சிங் இரும்பு கம்பிகளாலும், செங்கல்களாலும் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்தார். அதன்பின் அவர் அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் சரப்ஜித் இறந்தார்.
இதையடுத்து, இந்தியர் சரப்ஜித் சிங்கை தாக்கிய வழக்கில் சிறையில் அவருடன் தங்கி இருந்த கைதிகள் அமித் தண்ட்பா, முடாசிர் முனிர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்தியர் சரப்ஜித் சிங் கொலை செய்த வழக்கில் உரிய குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தியது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினார்.
இந்தியர் சரப்ஜித் சிங் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட அமித் தண்ட்பா, முடாசிர் முனிர் ஆகியோர் மீது லாகூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில், நேற்று நீதிபதி முகமது மொயின் கோகார் தீர்ப்பளித்தார். அதில், “ குற்றம்சாட்டப்பட்ட அமித், முடாசிர் ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் வலுவான ஆதாரங்கள் ஒன்று கூட தாக்கல் செய்யவில்லை. ஆதாரங்கள் இன்றி யாரையும் தண்டிக்க இயலாது என்பதால், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் விடுவிக்கிறேன்” என்று தீர்ப்பளித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்துக்கு வராமல், சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.