இலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம், அதிகாரப்போட்டி முடிவுக்கு வந்து, மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா அவரின் அலுவலகத்தில் இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் அமைச்சரவை நாளை அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்கும் என்றும் 30 அமைச்சர்கள் வரை பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்களும் இந்த அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். முதலில் நாடாளுமன்றத்தை முடக்கினார். சில நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தைக் கலைத்து 2019, ஜனவரி 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்ற கலைப்புக்கு தடைவிதித்தது. இதன்பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப் பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். ஆனால், இந்த வாக்கெடுப்பை அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை.
இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் உள்ளிட்ட 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், ராஜபக்ச பிரதமராக செயல்படத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசங்கே கூறுகையில், “ தான் அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன், சில குழுக்கள் சேர்ந்து அரசின் ஒற்றுமையைக் குலைத்துவிட்டன” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மீண்டும் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அதிபர் அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா, விக்ரமசிங்கேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் சஜித் பிரமதேசா கூறுகையில், “ முதலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறிய அதிபர் சிறிசேனா இப்போது ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமித்துள்ளது வியப்பாக இல்லை.
இதுதான் அதிபரின் உண்மையான குணம். எங்களின் அரசுக்கு விரோதமாக இருந்த சிலகுழுக்கள் அதிபரைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள். அதனால்தான் விக்ரமசிங்கேயுடன் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால், தற்போது உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக இருக்கிறது “ எனத் தெரிவித்தார்.