டைப் 2 ரக நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகளில் 7 பேர்களில் ஒருவர் என்ற வீதத்தில் அவசியமில்லாமல் வீட்டிலேயே உபகரணத்தை வைத்துக் கொண்டு நாளொன்ருக்கு பலமுறை ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்கின்றனர், இது செய்யத் தகுந்ததா? கூடாததா என்பதைப் பற்றி ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இது பற்றிய அமெரிக்க ஆய்வு கூறுவதென்னவெனில், டைப் 2 ரக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வீட்டில் உபகரணம் வைத்துக் கொண்டு அடிக்கடி ரத்த்தில் சர்க்கரை அளவு என்ன என்பதை சோதிக்க வேண்டிய அவசியமில்லை, அதுவும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் போது தேவையேயில்லை. மேலும் இப்படி தினசரி பலமுறை சோதித்து உடனே மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை அதன் அறிவுறுத்தப்பட்ட டோஸ்களுக்கும் மேல் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அபாயகரமாகக் குறையும் ஆபத்து உள்ளது.
வீட்டிலேயே மணிக்கொருதரம் சர்க்கரை அளவை சோதிப்பதன் மூலம் எதுவும் நடந்து விடப்போவதுமில்லை, சர்க்கரையின் அளவு மாறப்போவதுமில்லை. ஆனாலும் பலரும் தங்கல் விரல்களை தினமும் ஊசியால் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த அமெரிக்க ஆய்வில் சுமார் 370,000 டைப் 2 ரக நோயாளிகள் ஆய்வு செய்யப்பட்டதில் சுமார்88000 நோயாளிகள், அதாவது 23% நோயாளிகள் வீட்டிலேயே தங்கள் சர்க்கரை அளவை தேவையில்லாமல் சோதித்துக் கொள்பவர்களே.
“டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களில் இன்சுலின் அல்லது பிற சர்க்கரை அளவு குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளாதவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் அதிக மாற்றங்கல் தெரிகின்றன. இவர்கள்தான் அளவுக்கு அதிகமாக வீட்டிலேயே சோதித்துக் கொள்கின்றனர். இத்தகைய தேவையற்ற நடவடிக்கையினால் மன அழுத்தம், கவலைகள், செலவுகள்தான் அதிகரிக்கிறதே தவிர வேறு பிரயோஜனங்கள் இல்லை என்று” ஆய்வின் முன்னணி ஆசிரியரும், மிச்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியருமான டாக்டர் கெவின் பிளாட் தெரிவித்துள்ளார்.
டைப் 2 ரக சர்க்கரை நோய் மிகவும் இயல்பாக வரக்கூடியதுதான். இது முதுமை, உடல் பருமன் ஆகியவற்றுடன் தொடர்புடையது. உடலின் இயற்கையான இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றும் திறனை இழக்கும் போது டைப் 2 ரக நீரிழிவு நோய் உருவாகிறது. சிகிச்சை பெறாமல் புறந்தள்ளினால், பார்வையிழப்பு, கிட்னி பழுது, நரம்புச் சேதம், உடல் உறுப்புகளை வெட்டி எடுக்க வேண்டிய கட்டாயம் ஆகிய ஆபத்துகள் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளில் பலரும் வாய்வழி மருந்தையே திறம்பட பயன்படுத்தி இன்சுலின் தேவையில்லாமல் சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றனர். இன்சுலின் எடுத்து கொள்வதனால் உள்ள சிக்கல் என்னவெனில் சர்க்கரை அளவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அடிக்கடி சோதித்துப் பார்த்துக் கொள்வதை வலியுறுத்துவது. ஆனால் சர்க்கரை நோய்க்கு எதிரான பல மாத்திரைகள் இத்தகைய சோதனைகள் தேவைப்படாதது.
“சர்க்கரை நோயாளிகள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளில் பல சர்க்கரை அளவை ஆபத்தாக குறைக்கும் என்றால் பரிசோதனை அவசியம். ஆனால் இன்சுலின் அல்லது சர்க்கரை நோய் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாதவர்கள் அடிக்கடி வீட்டில் சோதித்துக் கொள்வது தேவையற்றது. அப்படி சோதித்துக் கொள்பவர்கள் தங்கள் மருத்துவரிடம் இதனைக் கூறிவிடுவது நல்லது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.