அமெரிக்க அதிபரான பிறகு தனது முதல் பயணத்தை இராக் மேற்கொண்டிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். இந்தப் பயணத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப்பும் சென்றிருக்கிறார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள, அமெரிக்க ராணுவத் தளவாடம் உள்ள அல் அசாத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் திடீரெனப் பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னரே அறிவிக்கப்படாத இந்தப் பயணம் சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று ட்ரம்ப் அறிவித்த சில நாட்களில் நடந்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பயணம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”நானும் மெலானியாவும் அல் ஆசாத்துக்குச் சென்று நமது ராணுவ வீரர்களைச் சந்தித்தோம். இறைவன் அமெரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளளார்.
இந்த நிலையில் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் இராக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து இராக் நடாளுமன்ற உறுப்பினர், “ட்ரம்ப் தனது எல்லை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கப் படைகள் இராக்கை ஆக்கிரமித்தது போதும்'' என்று தெரிவித்துள்ளார்.