போலந்தில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது அந்நாட்டில் இயங்கும் நிலக்கரி தொழிற்சாலையை மூடும்படி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி சென்றது உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
போலந்து நாட்டில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பருவ நிலை மாறுபாடு குறித்த உச்சி மாநாடு நடைபெற்றது. சுமார் 200 நாடுகள் பருவ நிலை குறித்தான இந்த மாபெரும் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன.
இந்த நிலையில் 50,000க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் புர்செல்ஸ் சாலையில் அந்நாட்டில் இயங்கும் நிலக்கரி தொழிற்சாலைக்கு எதிராகப் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணி குறித்து போலந்து போலீஸார் கூறும்போது, ''சுமார் 65,000 பேர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்ட மக்கள் பலர் 'கார்களுக்குப் பதிலாக, சைக்கிள்களைப் பயன்படுத்துங்கள். நமது பூமியைப் பாதுகாக்கவும். நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்' போன்ற பல பதாகைகளை ஏந்தி அமைதியாகச் சென்றனர்'' என்று தெரிவித்தனர்.
போலந்து மக்களின் இந்த அமைதிப் பேரணியை பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் வலிமைமிக்க வெற்றி என்று பாராட்டியுள்ளார்.
போலந்து மக்கள் எதிர்க்கும் இந்த நிலக்கரி தொழிற்சாலை உலகிலேயே மிகப் பெரியது. இங்கு கிட்டத்தட்ட 5,472 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து வருடத்துக்கு சுமார் 30,000 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.