உலகம்

‘ஒபக்’ கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கத்தார் திடீர் அறிவிப்பு: மீண்டும் அரபு நாடுகளிடையே மோதல்? - கச்சா எண்ணெய் விலையில் தாக்கம்

செய்திப்பிரிவு

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் திடீரென அறிவித்துள்ளது. கத்தாரின் இந்த முடிவு பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. அதுபோலவே அரபு நாடுகளிடையே மீண்டும் மோதல் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும்,  பொருளாதார பாதிப்பையும் கத்தார் சந்தித்தது. அந்த நாட்டுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது.

தரை வழியாகப் பொருட்களை, அண்டை நாடுகளான மற்ற அரபு நாடுகள் வழியாகத் தான் கொண்டு செல்ல முடியும். ஆனால் அந்தப் பாதையை சவுதி அரேபியா அடைத்ததால் பெரும் இன்னலுக்கு கத்தார் ஆளானது. கத்தார் உணவின்றித் தவிக்கும் சூழல் ஏற்பட்டு அந்நாட்டுப் பொருளாதாரம் முடங்கியது. இதன் பிறகு அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டன. இந்தச் சிக்கலில் இருந்து கத்தார் தற்போது தான் வெளியே வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்கில்’ இருந்து வெளியேறப்போவதாக கத்தார் இன்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் பெட்ரோலியத்துறை அமைச்சர் சத் அல் - காஃபி தோஹாவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '' ‘ஒபக்’ என அழைக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வருகிறது. ‘ஒபக்’ நாடுகளின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் எங்கள் முடிவை தெரிவித்து விடுவோம்'' என்றார்.

கத்தாரின் இந்த முடிவு பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. அதுபோலவே அரபு நாடுகளிடையே மீண்டும் மோதல் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

'ஒபக்' கூட்டமைப்பின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. சவுதி அரேபியா கோலோச்சும் இந்த அமைப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. சவுதி கூட்டமைப்பு நாடுகள் பதிலுக்கு தடை விதித்தால் கச்சா எண்ணெய் சந்தையிலும், கத்தாரின் பொருளாதாரத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT