இலங்கையில் அரசியல் மோதலுக்கு முடிவுகட்டும் விதமாக ரணில் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியினரை சந்தித்து பேச அதிபர் சிறிசேனா முன் வந்துள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா பதவி நீக்கம் செய்தார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் பெரும்பான்மையை நிரூபித்தார். மஹிந்த ராஜபக்சே தோல்வியைத் தழுவினார். ஆனால் அதிபர் சிறிசேனா வாக்கெடுப்பை ஏற்க மறுத்து வருகிறார்.
எனினும், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணில் விக்ரம சிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன், என்னால் அவரோடு இணைந்து பணியாற்ற முடியாது, வேறு யாரையாவது ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரை செய்யலாம் என அதிபர் சிறிசேனா கூறி வருகிறார்.
இந்தநிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா நேற்று சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது ‘‘ரணில் விக்ரமசிங்கேவுக்கு, தமிழ் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவிப்பதால் அவருக்கு கூடுதலாக 14 எம்.பி.க்களின் பலம் இருக்கிறது. எனவே அவர்களை சந்தித்து பேச வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’’ என அவர் வலியுறுத்தினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேயை விடவும் ரணிலுக்கு சற்று கூடுதலான அளவில் மட்டுமே பலம் உள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவால் ரணிலுக்கு தற்போது கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த சூழலில் அவரை நிராகரிக்க வேண்டாம் என ஜெயசூர்யா வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனை சிறிசேனா ஏற்றுக் கொண்டதாகவும், விரைவில் தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் ரணில் அணி தலைவர்களையும் சந்தித்து பேச முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.