இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜெயசூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் “புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்ட மகிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையை முறையாக நிரூபிக்க முடியவில்லை. இந்நிலையில், அவரது கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள், தொடர்ச்சியாக பத்திரியாளர்கள் சந்திப்பு மற்றும் போராட்டங்கள் மூலம் என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனாலும் ஜனநாயகத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளேன்.
மேலும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து கருத்து கேட்டு தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் அனுப்பியதாக குற்றம்சாட்டி உள்ளனர். நான் அப்படி ஒரு கடிதத்தை எழுதவே இல்லை. இந்த போலி கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.