இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் பயணம் செய்த இலங்கைத் தமிழர்கள் 157 பேர், நவுரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அதிகாரி ஸ்காட் மோரிஸன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“புதுச்சேரி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் நவுரு தீவுக்கு அனுப்பி வைத்துவிட்டோம்.
முன்னதாக அவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள தங்களின் உறவினர்களுடன் சேர்ந்து வாழும் வகையில், திரும்பிச் செல்ல வாய்ப்பளித்தோம். ஆனால், கடந்த ஜூன் 29-ம் தேதி தங்களின் வழக்கறிஞர்களுடன் பேசிய 157 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். இது எங்களுக்கு ஏமாற்றம் அளித் துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பி வைத்துவிட்டோம்.
இவர்கள் அனைவரும் அகதிகள் என்பது உறுதியாகும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கமாட்டோம். நவுரு தீவில்தான் குடியமர்த்துவோம். அவர்கள் அகதிகளாக இல்லாதபட்சத்தில், அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் சட்ட உதவி மையத்தின் செயல் இயக்குநர் ஹுக் டி கிரெட்ஸ்டர் கூறும்போது, “157 பேரும் கப்பலிலேயே போதிய ஜன்னல் கூட இல்லாத அறைகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேசக் கூட போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் சட்ட ரீதியாக அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், இரவோடு இரவாக அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்” என்றார்.