உலகம்

நார்த் சென்டினல் தீவில் அமெரிக்கர் உடலைத் தேடும் முயற்சி ஆபத்தானது: பழங்குடிகளுக்கான உரிமை அமைப்பு எச்சரிக்கை

பிடிஐ

அந்தமானில் உள்ள நார்த் சென்டினல் தீவில் பழங்குடியினரால் கொல்லப்பட்ட அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ் உடலைத் தேடும் இந்திய அதிகாரிகளின் முயற்சி ஆபத்தானது, அதை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று பழங்குடிகளின் உரிமைக்காகப் போராடும் சர்வைவல் இன்டர்நேஷனல் எச்சரித்துள்ளது.

அந்தமான் நிகோபர் தீவில் இருந்து 35 மைல் தொலைவில் நார்த் சென்டினல்தீவு அமைந்திருக்கிறது. இந்த தீவுக்குள் செல்வது மத்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தவிதமான முன்அனுமதியும் பெறாமல் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ்(வயது27) மீனவர்களுக்கு பணம் கொடுத்துக் கடந்த 17-ம் தேதி அங்கு சென்றார். ஆனால், வெளிமனிதர்கள் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவரும் சென்டினல் பழங்குடி மக்கள் அமெரிக்க இளைஞர் ஜான் ஆலனை அம்பு எய்தி கொலை செய்தனர்.

இதையடுத்து, ஜான் உடலை சென்டினல் பழங்குடியினர் புதைப்பதைப் பார்த்துவிட்டு, மீனவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜான் ஆலன் உடலை மீட்க பல்வேறு முயற்சிகளை போலீஸார் செய்து வருகின்றனர். ஆனால் முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு நார்த் சென்டினல் தீவுக்கு அருகே சென்றபோது அந்தபழங்குடியினர் தாக்க முற்பட்டதால், போலீஸார் திரும்பினார்கள். மானுவியவியலாளர் உதவியுடன் அங்குச்செல்ல போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடிவரும் லண்டனைச் சேர்ந்த சர்வைவல் இன்டர்நேஷனல் தொண்டுநிறுவனம், நார்த்சென்டினல் தீவுக்குள் அமெரிக்க உடலைத் தேடும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து முயற்சிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் காரே கூறியதாவது:

நார்த் சென்டினல் தீவுக்குள் சென்று பழங்குடிகளால் கொல்லப்பட்ட அங்கேயே புதைக்கப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலன் உடலைத் தேடும் முயற்சியை இந்திய அதிகாரிகள் கைவிட வேண்டும். தொடர்ந்து அங்கு அமெரிக்கர் உடலைத் தேடுவது சென்டினல் பழங்குடிகளுக்கும், இந்தியர்களுக்கும் ஆபத்தானது. எந்தவிதமான வெளிஉலக நோய்க் கிருமிகள் தாக்கினாலும், சென்டினல் பழங்குடிமக்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுவார்கள்.

மிகவும் ஆபத்தான ப்ளூகாய்ச்சல், தட்டம்மை, அல்லது வேறுநிலப்பரப்பில் இருந்துவரும் நோய்கள் சென்டினல் பழங்குடிகளை தாக்கினால், ஒட்டுமொத்த மக்களும் அழிந்துவிடுவார்கள். அந்த நோய்களை எதிர்த்துப் போராடும் எதிர்ப்புச் சக்தி அவர்களுக்கு கிடையாது. கடந்த காலத்தில் இதபோன்று சென்டினல் பழங்குடிகளை சிலர் அணுக முயற்சித்து அவர்களால் கொல்லப்பட்டனர். அமெரிக்கர் ஜான் ஆலன் உடலை சென்டினல் தீவிலேயே விட்டுவிடுங்கள். பழங்குடிகளிடமே அந்த உடல் இருக்கட்டும்.

பாதுகாக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் தடையின் தீவிரத்தை வலுப்படுத்த வேண்டும். அங்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து, நார்த் சென்டினல் தீவு மட்டுமல்லாமல் அந்தமானில் உள்ள பல்வேறுபட்ட தீவுகளிலும் மக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜுன் மாதம் வரை அந்தமானில் உள்ள நார்த் சென்டினல் தீவு உள்ளிட்ட 29 தீவுகளில் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தடைசெய்யப்பட்ட தீவுக்குள் முறையான முன்அனுமதியில்லாமல் செல்லக்கூடாது. ஆனால், இந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டு பாதுகாக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT