இந்தியாவுடன் அமைதிப்பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருக்கிறேன் என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிம் விவகாரங்கள் குறித்தும் மவுனம் கலைத்தார்.
இது குறித்து இந்தியாவின் ஆங்கில தனியார் செய்தி சேனல் ஒன்றில் இம்ரான் கூறும்போது, “நாம் கடந்த காலத்தில் இருக்க முடியாது, எங்களுக்கும் இந்தியா ஓப்படைக்க வேண்டிய குற்றவாளிகள் உள்ளனர். எங்கள் நாடு பயங்கரவாதத்துக்கு எதிரானது” என்று கூறிய இம்ரான் கான் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மாஸ்டர் மைண்ட் ஹபீஸ் சயீத் பற்றிய கேள்விக்கு, “இந்தப் பிரச்சினைகள் வழிவழியாகப் பெறப்பட்டது, நாம் அதிலேயே ஊறிக்கொண்டிருக்க முடியாது, நல்ல உறவு வேண்டுமெனில் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராக வேண்டும்” என்றார் இம்ரான்.
மேலும் இந்தியப் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த இம்ரான் கான், “பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் சமாதானத்தையே விரும்புகின்றனர். இந்தியப் பிரதமரைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். இங்கு மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் மட்டுமல்ல எந்தப் பிரச்சினைக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையே தீர்வு. காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவம் தீர்வு கிடையாது. ஆனால் அமைதிக்கான செய்கை ஒரு பக்கத்திலிருந்து மட்டும் வருவதல்ல.
இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் முடியும் வரை அங்கிருந்து வரும் நல்ல செய்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார் இம்ரான் கான்.