உலகம்

பாகிஸ்தானில் வன்முறை எதிரொலி: நாட்டைவிட்டு வெளியேற அசியா முடிவு

செய்திப்பிரிவு

மத அவமதிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட  அசியா பீபிக்கு  எதிராக பாகிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்நாட்டை விட்டு அவர் வெளியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அவரது சகோதரர் ஜேம்ஸ்  கூறும்போது, ''எனது சகோதரிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அசியாவுக்கு வேறு வழி இல்லை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அசியாவுக்கு அடைக்கலம் தருவதாக தெரிவித்துள்ளன. அசியாவின் கணவர் அவர்களது குழந்தைகளுடன் பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் வந்திருக்கிறார். அசியாவின் விடுதலைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்'' என்றார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ராவல்பிண்டி உள்ளிட்ட இடங்களில் அசியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அதில் அசியாவைப் பொது வெளியில் தூக்கிலிட வேண்டும் என்று முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

மற்றொரு பக்கம்  பாகிஸ்தானில் அரசியலைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போது அசியா போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படமாட்டர்கள் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். மேலும் தொடர் வன்முறைகளால் அசியாவின் விடுதலை தாமதமாகி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த  நிலையில் வன்முறையாளர்கள் தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அரசு தனது கடமையைச் செய்யும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, கிறிஸ்தவரான அசியா தனது சக பணியாளர்களுக்கு தண்ணீர் கொடுக்கும்போது,அவர்கள்  கிறிஸ்தவரிடமிருந்து தண்ணீர் வாங்க மறுத்ததுடன், அவரை முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும்  வற்புறுத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து அசியா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதில் அவர் முகமது நபியை அவமானப்படுத்திவிட்டார் என்றும் அசியா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால் அவருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அசியா தரப்பு மறுத்து வந்தது. அசியாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

அசியாவின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் தீவிர மதப்பற்றாளர்கள் பலர், அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் பல இடங்களில் வன்முறை நிலவுகிறது.

பாகிஸ்தானில் தொடர்ந்து சிறுபான்மையினர்கள் தீவிர மதப்பற்றாளர்களால் பாதிக்கப்பட்டு வருவதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT